சிவய.திருக்கூட்டம்
sivaya.org
Please set your language preference
by clicking below languages link
Search this site with
words in any language e.g. पोऱ्‌ऱि
song/pathigam/paasuram numbers: e.g. 7.039

This page in Tamil   Hindi/Sanskrit   Telugu   Malayalam   Bengali   Kannada   English   ITRANS    Marati  Gujarathi   Oriya   Singala   Tibetian   Thai   Japanese   Urdu   Cyrillic/Russian  
1201   பொதுப்பாடல்கள் திருப்புகழ் ( - வாரியார் # 1080 )  

விரை சொரியும்

முன் திருப்புகழ்   அடுத்த திருப்புகழ்
தனதனன தனதனன தனன தாத்ததன
     தனதனன தனதனன தனன தாத்ததன
          தனதனன தனதனன தனன தாத்ததன ...... தனதான

விரைசொரியு ம்ருகமதமு மலரும் வாய்த்திலகு
     விரிகுழலு மவிழநறு மெழுகு கோட்டுமுலை
          மிசையில்வரு பகலொளியை வெருவ வோட்டுமணி ...... வகையாரம்
விடுதொடைகள் நகநுதியி லறவும் வாய்த்தொளிர
     விழிசெருக மொழிபதற அமுது தேக்கியகை
          விதறிவளை கலகலென அழகு மேற்பொழிய ...... அலர்மேவும்
இருசரண பரிபுரசு ருதிக ளார்க்கவச
     மிலகுகடல் கரைபுரள இனிமை கூட்டியுள
          மிதம்விளைய இருவரெனு மளவு காட்டரிய ...... அநுராகத்
திடைமுழுகி யெனதுமன தழியு நாட்களினு
     மிருசரண இயலும்வினை யெறியும் வேற்கரமு
          மெழுதரிய திருமுகமு மருளு மேத்தும்வகை ...... தரவேணும்
அரிபிரம ரடிவருட வுததி கோத்தலற
     அடல்வடவை யனலுமிழ அலகை கூட்டமிட
          அணிநிணமு மலைபெருக அறையும் வாச்சியமு ...... மகலாது
அடல்கழுகு கொடிகெருட னிடைவி டாக்கணமு
     மறுகுறளு மெறிகுருதி நதியின் மேற்பரவ
          அருணரண முகவயிர வர்களு மார்ப்பரவ ...... மிடநாளும்
பரவுநிசி சரர்முடிகள் படியின் மேற்குவிய
     பவுரிகொடு திரியவரை பலவும் வேர்ப்பறிய
          பகர்வரிய ககனமுக டிடிய வேட்டைவரு ...... மயில்வீரா
படருநெறி சடையுடைய இறைவர் கேட்குரிய
     பழயமறை தருமவுன வழியை யார்க்குமொரு
          பரமகுரு பரனெனவு மறிவு காட்டவல ...... பெருமாளே.
Easy Version:
விரை சொரியு(ம்) ம்ருகமதமு(ம்) மலரும் வாய்த்து இலகு
விரி குழலும் அவிழ நறு மெழுகு கோட்டு முலை மிசையில்
வரு
பகல் ஒளியை வெருவ ஓட்டும் மணி வகை ஆரம் விடு
தொடைகள் நக நுதியில் அறவும் வாய்த்து ஒளிர
விழி செருக மொழி பதற அமுது தேக்கிய கை விதறி வளை
கல கல் என அழகு மேல் பொழிய அலர் மேவும் இரு சரண
பரிபுர சுருதிகள் ஆர்க்க
அவசம் இலகு கடல் கரை புரள இனிமை கூட்டி உள்ளம்
இதம் விளைய இருவர் எனும் அளவு காட்ட அரிய அநுராகத்து
இடை முழுகி எனது மனது அழியு(ம்) நாட்களினும்
இரு சரண இயலும் வினை எறியும் வேல் கரமும் எழுத அரிய
திரு முகமும் அருளும் ஏத்தும் வகை தர வேணும்
அரி பிரமர் அடி வருட உததி கோத்து அலற அடல் வடவை
அனல் உமிழ அலகை கூட்டம் இட அணி நிணமும் மலை
பெருக அறையும் வாச்சியமும் அகலாது
அடல் கழுகு கொடி கெருடன் இடை விடாக் கணமும் மறு
குறளும் எறி குருதி நதியின் மேல் பரவ அருண ரண முக
வயிரவர்களும் ஆர்ப்பு அரவம் இட
நாளும் பரவு நிசிசரர் முடிகள் படியின் மேல் குவிய பவுரி
கொ(ண்)டு திரிய வரை பலவும் வேர்ப் பறிய பகர்வரிய
ககன(ம்) முகடு இடிய வேட்டை வரு(ம்) மயில் வீரா
படரு(ம்) நெறி சடை உடைய இறைவர் கேட்க உரிய பழய
மறை தரு(ம்) மவுன வழியை யார்க்கும் ஒரு பரம குரு பரன்
எனவும் அறிவு காட்ட வ(ல்)ல பெருமாளே.
Add (additional) Audio/Video Link

விரை சொரியு(ம்) ம்ருகமதமு(ம்) மலரும் வாய்த்து இலகு
விரி குழலும் அவிழ நறு மெழுகு கோட்டு முலை மிசையில்
வரு
... வாசனை வீசும் கஸ்தூரியும் மலரும் பொருந்தி விளங்கும் பரந்த
கூந்தலும் அவிழ்ந்து விழ, வாசனைப் பண்டங்கள் மெழுகப்பட்ட மலை
போன்ற மார்பகங்களின் மேல் விளங்குவதும்,
பகல் ஒளியை வெருவ ஓட்டும் மணி வகை ஆரம் விடு
தொடைகள் நக நுதியில் அறவும் வாய்த்து ஒளிர
...
சூரியனுடைய ஒளியையும் அஞ்சும்படி விரட்ட வல்ல ரத்தின வகைகள்,
முத்து இவைகளால் ஆன மாலைகளும், நகத்தின் நுனியால் ஏற்பட்ட
நகரேகைகளும் நன்கு பொருந்தி விளங்க,
விழி செருக மொழி பதற அமுது தேக்கிய கை விதறி வளை
கல கல் என அழகு மேல் பொழிய அலர் மேவும் இரு சரண
பரிபுர சுருதிகள் ஆர்க்க
... கண்கள் செருக, பேச்சு பதற, அமுது
நிரம்ப உண்ட கைகள் நடுக்கம் உற்று அசைவதால் வளையல்கள்
கலகலென ஒலிக்க, அழகு மேலே எங்கணும் நிறைந்து பரவி விளங்க, மலர்
போன்ற இரண்டு பாதங்களிலும் உள்ள சிலம்புகள் இசை வகைகளை
ஒலிக்க,
அவசம் இலகு கடல் கரை புரள இனிமை கூட்டி உள்ளம்
இதம் விளைய இருவர் எனும் அளவு காட்ட அரிய அநுராகத்து
இடை முழுகி எனது மனது அழியு(ம்) நாட்களினும்
... பரவச
மயக்கம் விளக்கம் உறும் கடல் கரை புரண்டு ஓட, இனிமை கூடி மனத்தில்
இன்பம் பெருக; ஆண் பெண் இருவர் உள்ளோம் என்னும் பிரிவின்
அளவே காணுதற்கரிய காமப் பற்றின் இடையே முழுகி என் உள்ளம்
அழிந்து கெடும் நாட்களிலும்,
இரு சரண இயலும் வினை எறியும் வேல் கரமும் எழுத அரிய
திரு முகமும் அருளும் ஏத்தும் வகை தர வேணும்
... இரண்டு
திருவடிகளின் மேன்மைத் தகுதியையும், வினைகளை அறுத்துத் தள்ள
வல்ல வேல் ஏந்திய கரங்களையும், எழுதுதற்கு முடியாத அழகுள்ள
திருமுகங்களையும், உன் திருவருளையும் போற்றும் வழி வகையை
எனக்கு நீ தந்தருள வேண்டும்.
அரி பிரமர் அடி வருட உததி கோத்து அலற அடல் வடவை
அனல் உமிழ அலகை கூட்டம் இட அணி நிணமும் மலை
பெருக அறையும் வாச்சியமும் அகலாது
... திருமாலும், பிரமனும்
திருவடியை வருடவும், கடல் கவிழ்ந்து புரண்டு ஒலி செய்யவும், வலிய
வடவாமுகாக்கினி நெருப்பை அள்ளி வீசவும், பேய்கள் கூட்டம் கூடவும்,
வரிசையாய்க் கிடந்த மாமிசமும் மலை போல் பெருகவும், பேரொலியோடு
அடிக்கப்படும் வாத்தியங்களும் நீங்காது ஒலிக்கவும்,
அடல் கழுகு கொடி கெருடன் இடை விடாக் கணமும் மறு
குறளும் எறி குருதி நதியின் மேல் பரவ அருண ரண முக
வயிரவர்களும் ஆர்ப்பு அரவம் இட
... வலிய கழுகு, காக்கை,
கருடன் இவைகளின் இடைவிடாது கூடிய கூட்டமும் மற்றும் பூத
கணங்களும் அலை வீசும் ரத்த ஆற்றின் மேல் வந்து பரந்து சேரவும்,
சிவந்த போர்க் களத்து வயிரவர் கணங்களும் பேரொலி செய்யவும்,
நாளும் பரவு நிசிசரர் முடிகள் படியின் மேல் குவிய பவுரி
கொ(ண்)டு திரிய வரை பலவும் வேர்ப் பறிய பகர்வரிய
ககன(ம்) முகடு இடிய வேட்டை வரு(ம்) மயில் வீரா
... நாள்
தோறும் எங்கும் பரவி இருந்த அசுரர்களின் தலைகள் பூமியின் மேல்
நிரம்பக் குவியவும், சுழற்சியுடன் திரியும்படி பல மலைகளும் வேரோடு
பறிக்கப்பட்டு விழவும், சொல்லுதற்கரிய ஆகாய உச்சிகள் இடிபட்டு
அதிரவும், வேட்டை ஆடுவது போலச் சுற்றி வரும் மயில் வீரனே,
படரு(ம்) நெறி சடை உடைய இறைவர் கேட்க உரிய பழய
மறை தரு(ம்) மவுன வழியை யார்க்கும் ஒரு பரம குரு பரன்
எனவும் அறிவு காட்ட வ(ல்)ல பெருமாளே.
... பரந்து விரியும்
வகையதான சடையை உடைய சிவபெருமான் கேட்பதற்குரிய பழைய
வேதம் புலப்படுத்தும் மெளன வழியை யாவருக்கும் ஒப்பற்ற மேலான
குருபரன் என்று போற்ற நின்று, ஞான அறிவை புலப்படுத்த வல்ல
பெருமாளே.

Similar songs:

1201 - விரை சொரியும் (பொதுப்பாடல்கள்)

தனதனன தனதனன தனன தாத்ததன
     தனதனன தனதனன தனன தாத்ததன
          தனதனன தனதனன தனன தாத்ததன ...... தனதான

Songs from this thalam பொதுப்பாடல்கள்

This page was last modified on Wed, 28 Feb 2024 01:04:02 -0500
 
1
   
    send corrections and suggestions to admin @ sivaya.org

thiruppugazh song